மரம் வளர்ப்போம்

மரம் வளர்ப்போம்

நம் அடுத்த தலைமுறையினர் வாழ சொத்துக்களை சேர்ப்பதை விட மரங்களை பாதுகாப்பதே மிக முக்கியம்.




வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பது அன்றைய வாசகம். ஆனால் ஆளுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. மரங்கள் இயற்கையின் கொடை. இயற்கை அன்னையின் மடியில் மலர்ந்த முதல் குழந்தை.

சுயநலத்தின் பிடியில் சிக்கிய மானிட சமுதாயம் இயற்கையை அழித்து மரங்களை வெட்டி காடுகளை குறைத்து தன் தலையில் தானே தீ வைத்துக் கொள்கின்றது. இவ் அறிவற்ற செயலை தடுக்க வேண்டும்.

கஷ்டப்பட்டு உழைத்து பணம் சேமிப்பதும் சொத்து சேர்த்து வைப்பது மட்டும் நம் அடுத்த தலைமுறைக்கு செய்யும் கடமை அல்ல.

நாம் வாழும் இந்த பூமியை சுத்தமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் வளம் மிக்கதாகவும் அவர்களுக்கு கையளிக்க வேண்டும்.

இதற்கு நாம் செய்ய வேண்டியது மரம் வளர்ப்பதும் மரம் வளர்ப்பதன் முக்கியத்துவம் பற்றி அவர்களுக்கு அறிய வைப்பதும் ஆகும்.

மரத்தின் பயன்கள்

தொழில் வளர்ச்சியின் காரணமாக அதிகரித்த தொழிற்சாலைகளின் பயன்பாட்டினாலும் மனித தேவையின் பொருட்டு அதிகரித்த மோட்டார் வாகன பயன்பாட்டினாலும் மாசாக்கப்படும் இந்த சுற்றுச்சூழலை சுத்தம் செய்பவை இந்த மரங்களே ஆகும்.

இதற்காக ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாக மரங்களே தொழிற்படுகின்றன. மரங்களால் உருவாக்கப்படுகின்ற இந்த ஆக்சிஜன் தான் மனிதனுடைய பிராண வாயு என்பது அனைவரும் அறிந்த விடயமே.

மரங்கள் காற்றை தூய்மை செய்கின்றன. மிருகங்கள் பறவைகள் என அனைத்து உயிர்களையும் வெயிலில் இருந்து காக்க நிழலையும் தருகின்றன.

இதை உணர்த்துவதற்காகவே “நிழலின் அருமை வெயிலில் தெரியும்” என எமது முன்னோர்கள் பொன்மொழி மூலம் அறிய தந்துள்ளனர்.

தற்காலத்தில் நாம் உணர்கின்ற அதிகப்படியான வெப்பத்திற்கு காரணம் நாம் மரங்களை அழித்தமையால் ஏற்பட்ட நிழலின்மையே ஆகும்.

மரங்கள் பறவைகள், விலங்குகள் போன்றவற்றிற்கு புகலிடமாக விளங்குகின்றன. மரங்கள் மண்ணரிப்பைத் தடுக்கின்றன. நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் தடுக்கின்றன.

இவை அனைத்திற்கும் மேலாக நீரானது ஆவியாகி மேகமாகி மழையாகப் பெய்ய பெரிதும் துணை புரிகின்றன. பூ, காய், கனி, கீரை போன்ற உணவு வகைகளை தருகின்றன. சிறந்த மருந்துகளை உருவாக்க மூலிகை பொக்கிஷங்களாகவும் காணப்படுகின்றன.

மேலும் கப்பல் கட்டுவதற்கும் மரவேலைப்பாடு நிறைந்த பெரிய பொருட்கள் முதல் தீப்பெட்டி போன்ற சிறிய பொருட்கள் வரை பல வகையானவற்றை தயாரிக்கவும் உதவுகின்றன.

தேவைக்கேற்ப பல வகையான மரங்களை வளர்த்தல்

மரத்தில் பல வகை உள்ளன. ஒவ்வொருவரின் விருப்பத்திற்கேற்பவும் சூழ்நிலைகளுக்கேற்பவும் அவரவருக்குத் தேவையான மரங்களைத் தாங்களே தேர்ந்தெடுத்து வளர்க்கலாம்.

அந்த வகையில் கோடை நிழலுக்காக வேம்பு, தூங்குமூஞ்சி, புங்கன், பூவரசு, காட்டு வாகைமரம் போன்றவற்றை வளர்க்கலாம்.

பசளை உரங்களுக்காக வாகை இனங்கள், கிளிசரிடியா, வாதநாராயணன், ஒதியன், கல்யாண முருங்கை, பூவரசு போன்றவற்றை வளர்க்கலாம்.

கால்நடை தீவனத்திற்காக ஆச்சா, வாகை, தூங்குமூஞ்சி, கருவேல், வெள்வேல் போன்ற மரங்களை வளர்க்கலாம்.

கட்டுமான பொருட்களுக்காக கருமருது, மூங்கில், வேம்பு, வாகை, புனை, மருது ஆகியவற்றை வளர்க்கலாம்.

மருந்து பொருட்களுக்காக கடுக்காய், தானிக்காய், எட்டிக்காய் போன்றவற்றை வளர்க்கலாம்.

பள்ளிச் சூழலில் நெல்லி, அருநெல்லி, களா, விருசம், விளா, கொடுக்காப்புளி போன்ற மரங்களை வளர்த்து பயன்பெறலாம்.

மரங்கள் அழிவதற்கான காரணங்கள்

மரங்களானவை மனித செயற்பாடுகளினாலும் இயற்கை காரணங்களாலும் அழிவடைகின்றன.

மரங்களை அழிக்கும் மனித செயற்பாடுகளாக சேனைப் பயிர்ச்செய்கை, நகராக்கம், கட்டுமான தேவைகளுக்காக அதிகளவில் மரங்களை வெட்டுதல், சுரங்கம் அகழ்தல், வீதிகள் அமைத்தல், குடியிருப்புகள் அமைத்தல், காட்டு தொழில்களுக்காக காடுகளுக்கு தீ வைத்தல் போன்றவற்றை குறிப்பிடலாம்.

மரங்களை அழிக்கும் இயற்கைக் காரணிகளாக காட்டுத்தீ, நிலச்சரிவு, நிலநடுக்கம், சூறாவளி, வெள்ளப்பெருக்கு, வறட்சி போன்றவற்றை குறிப்பிடலாம்.

மரங்கள் அழிவடைவதை தடுக்கும் முறைகள்

அளவுக்கதிகமான காட்டுவளம் சுரண்டப்படுவதை தவிர்த்தல், காட்டு வளப் பிரதேசங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகளை தடை செய்தல்,

மரம் வளர்ப்பு தொடர்பாகவும் அதன் முக்கியத்துவம் தொடர்பாக பள்ளிகளிலும் மக்களிடையேயும் விழிப்புணர்வை ஏற்படுத்தல், பாதுகாப்பு தொடர்பாக கடுமையான சட்டங்களை உருவாக்கி அமுல்படுத்தல்.

Post a Comment

அன்பு வாசகரே! உங்களது கருத்துக்களினை இங்கே பதிவிடுங்கள் பிறரும் படிப்பார்கள்

Previous Post Next Post