கிறிஸ்தவ சமயத்தின் தோற்றமும் பரவலும் - ORIGIN AND SPREAD OF CHRISTIANITY

CHRISTIANITY

ஐரோப்பாவில் ஒழுங்காக அமைப்புப் பெற்ற முதலாவது சமயம் கிறிஸ்தவ சமயமாகும். ஐரோப்பிய பண்பாட்டை கட்டியெழுப்புவதற்கு அடிப்படையாக அமைந்ததும் கிறிஸ்தவ சமயமாகும்.

கிறிஸ்தவ சமயத்தின் தோற்றம்

கிறிஸ்தவ சமயத்தின் ஆரம்ப கர்த்தா (ஸ்தாபகர்) கிறிஸ்துநாதராவார். அவர் பலஸ்தீனத்தில் சிறிய ஊராகிய பெத்லகேமில் பிறந்தார். தற்போது பாவனையில் உள்ள கிறிஸ்துவுக்குப்பின் எனப்படும் காலம் கிறிஸ்துவின் பிறப்பை முன்னிட்டே கணிப்பிடப்படுகிறது. கிறிஸ்தவர்களின் மதிப்பிற்குப் பாத்திரமான மரியாள், இயேசுவின் தாயாவாள். இயேசுவின் பிறப்பு நிகழ்ந்த காலத்தில் யூத இனத்தவர் உரோமப் பேரரசின் கீழ் இருந்தனர். உரோமப் பேரரசின் ஒரு பகுதியாக விளங்கிய பலஸ்தீனாவின் கலிலேயப் பகுதியை ஏரோது எனும் யூத இன அரசன் ஆட்சி செய்தான். ஜெருசலேமின் ஆளுனராக உரோம இனத்தைச் சேர்ந்த பிலாத்து இருந்தான்.

யூதர்களின் மீட்பின் பொருட்டு மீட்பர் ஒருவர் வருவாரென யூதர்கள் நம்பினர். அக் காலத்தில் அவரது வருகையை மக்கள் எதிர்பார்த்தவண்ணமிருந்தனர். மீட்பரைப் பற்றிப் போதித்து அவரை வரவேற்க மக்களை ஆயத்தப்படுத்தியவர் திருமுழுக்கு யோவான் ஆவார். முப்பது வயது வரை கலிலேயாவில் நாசரேத் ஊரில் அமைதியாக வாழ்ந்த இயேசு, முப்பதாவது வயதில் திருமுழுக்கு யோவானிடம் திருமுழுக்குப் பெற்றுத் தமது பகிரங்க வாழ்வை ஆரம்பித்தார். அவரது பகிரங்க வாழ்வு மூன்று வருடங்கள் மாத்திரமே நிலைத்தது.

உலகப் படைப்பு தொடர்பான கதை தொடக்கம் திருமுழுக்கு யோவான் வரை அதாவது இயேசுவிற்கு முற்பட்ட காலப் பகுதி பழைய ஏற்பாடு எனப்படுகிறது. இயேசுவின் காலந் தொடக்கம் அவரது சொல், செயல்கள் மற்றும் அவரது சீடர்களின் போதனைகள், செயல்கள் என்பன அடங்கிய பகுதி புதிய ஏற்பாடு எனப்படுகிறது. புதிய ஏற்பாட்டையும், பழைய ஏற்பாட்டையும் இணைத்து எழுதப்பட்ட நூலே பரிசுத்த வேதாகமம் என அறிமுகப்படுத்தப்படுகிறது.

கிறிஸ்தவர்களின் புனித நூல் பரிசுத்த வேதாகமமாகும்.

கிறிஸ்துநாதர் போதித்த மதம் கிறிஸ்தவ மதம் எனப்படுவதுடன், அதன் மூலம் நீதி, அன்பு, இரக்கம் என்பன அடங்கிய இறை அரசு பற்றிப் போதிக்கப்பட்டது.

தான் மனிதாவதாரம் எடுத்த இறைமகன் என்றும், உலக மீட்பரென்றும் இயேசு போதித்தார். உலகில் இறையரசை நிறுவுவது இயேசுவின் செயலாக இருந்தது.

இயேசுநாதரின் முக்கிய படிப்பினைகள் சில

முழு உலகையும் படைத்தவர் இறைவன்

இறைவன் இரக்கமுடையவர்

இறைவனின் அரசு அன்பு. சமாதானம், நீதி என்பவற்றைக் கொண்ட அரசாகும்.

அந்த அரசு இப்போதே எம்மிடையே தோன்றியுள்ளது. 

இறையரசை ஏற்றுக் கொள்ளும் பொருட்டு நாம் எமது தவறுக்காக மனம் வருந்தி, எம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.

அன்பு அனைத்தையும் விட மேலானது. 

இறைவன் எம்மை அன்பு செய்தது போல நாமும் ஒருவர் ஒருவரை அன்பு செய்து சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும். 

நாம் இறைவனிடம் விசுவாசத்துடன் ஜெபிக்க வேண்டும்.

சாதாரண மக்கள் விளங்கிக் கொள்ளக் கூடிய முறையில் இயேசு தனது போதனையை முன்வைத்தார்.

இயேசு யூத மதத்தை அழிப்பதற்கு அன்று, அதை நிறைவேற்றுவதற்கே வந்தார். எனினும் அவர் போதித்த சில விடயங்களாலும், அவர் தம்மை இறைமகன் என்றதாலும் கோபமடைந்த யூத சமூகமும், சமயத் தலைவர் களும் அவரைக் கொலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இவ்வாறு அவர்கள் இயேசுவைப் பிடித்து மரணத்திற்கு ஏதுவான குற்றத்தை அவர்மீது சுமத்தினர். இயேசு உரோமப் பேரரசனான சீசருக்கு எதிராகப் போதித்து, மக்களைத் தூண்டியதாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது. இராஜ துரோகம் செய்தோருக்கு மரணதண்டனை வழங்கும் முறையாக சிலுவையில் அறைந்து கொலை செய்யும் முறையே அன்று இருந்தது.

இவ்வாறு யூதத் தலைவர்களின் வற்புறுத்தலால் ஆளுநர் பிலாத்துவால் இயேசு மரணத்திற்குத் தீர்ப்பிடப்பட்டார்.

தாம் யூதத் தலைவர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டு மரணத்திற்கு உள்ளாக்கப்படுவதாகவும், மூன்றாம் நாள் மரணத்தினின்றும் தாம் உயிர்த் தெழுவதாகவும் இயேசு தம் சீடர்களுக்குக் கூறினார். இயேசு தாம் கூறியபடியே மூன்றாம் நாள் மரணத்தினின்றும் உயிர்த்தெழுந்ததுடன், தம் சீடர்களுக்குப் பலமுறை காட்சி கொடுத்தார். இயேசு மரித்த மூன்றாம் நாள் உயிர்ந்தெழுந்தது கிறிஸ்தவ சமயத்தினருக்கு முக்கிய நிகழ்வாகும். கிறிஸ்தவர்கள் தமது முக்கிய விழாவாகக் கொண்டாடப்படுவதும் இதனையேயாகும்.

கிறிஸ்து என்பது 'கிறிஸ்டோஸ்' என்ற கிரேக்க சொல்லிருந்து வந்ததாகும். இதன் கருத்து "அருட்பொழிவு" செய்யப்பட்டவர் (அபிஷேகம் செய்யப்பட்டவர்) என்பதாகும். அதாவது மனிதரின் மீட்புப் பணியை நிறைவேற்றும் பொருட்டு இறைவனால் அருட்பொழிவு செய்யப்பட்டவர் என்பதாகும். இதனால் அவரை இயேசுக் கிறிஸ்து என்கின்றோம். கிறிஸ்தவர் என்ற சொல்லும் இந்தச் சொல்லிலிருந்து வந்ததேயாகும்.

கிறிஸ்தவ சமயம் பரவுதல்

கிறிஸ்தவ சமயம் இயேசுவின் மரணத்தின் பின்னரே பரவத் தொடங்கியது. இயேசுநாதர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் பன்னிரு சீடர்களைத் தெரிவு செய்து அதற்கான ஆயத்தங்களைச் செய்தார். இந்தப் பன்னிருவரும் திருத்தூதர்கள் என அழைக்கப்பட்டதுடன், மேலும் பலர் அவரது சீடர்களாகினர்.

இயேசு மரணத்தினின்றும் உயிர்த்த நாற்பதாம் நாள் விண்ணுலகை அடைந்தார். அவ்வாறு அவர் விண்ணுலகை அடையும் முன்னர் தம் சீடர்களை நோக்கி ஜெருசலம் தொடங்கி உலகம் முழுவதிலும் நற்செய்தியை அறிவிக்கும்படி (இறையரசு தொடர்பான செய்தி) கூறினார். இதன் பொருட்டு அவர்கள் திடத்தினைப் பெறும் வரையில் ஜெருசலேமில் தங்கியிருக்கும்படி வேண்டினார்.

இயேசு விண்ணுலகை அடைந்த பத்தாம் நாள் அதாவது அவரது உயிர்ப்பின் பின்னர் ஐம்பதாம் நாள் இயேசுவின் செய்தியை அவரது சீடர்கள் அறிவிக்கத் தொடங்கினர். இந்த நாள் பெந்தகொஸ்த திருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. பெந்தகொஸ்த என்பதன் கருத்து 50 ஆவது நாள் என்பதாகும். அன்றைய தினமே ஜெருசலேமிலிருந்த யூதர்களும், ஏனைய நாடுகளிலிருந்து வந்திருந்த 3000 பேரும் இயேசுக் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அன்று முதல் திருத் தூதர்களும், ஏனைய சீடர்களும் பல இடங்களுக்கு சிதறுண்டு போய் கிறிஸ்தவ சமயத்தைப் பரப்பினர்.

ஆரம்ப யுகத்தில் கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியோர் சமுதாயத்தில் அடிமட்டத்தில் உள்ளவர்களாக இருந்த போதிலும், கி.பி இரண்டாம் நூற்றாண்டளவில் உயர் வகுப்பினரைப் போலவே, கற்றவர்கள் பலரும் கிறிஸ்தவ சமயத்தைப் பின்பற்றத் தொடங்கினர்.

கிறிஸ்தவ சமயம் தமது பேரரசு முழுவதும் பரவுவதை உரோமர்களால் பொறுக்க முடியவில்லை. இதனால் மூன்று நூற்றாண்டுகளாகக் கிறிஸ்தவ மததிற்கான இடையூறுகள் ஆரம்பமாகியது. இவற்றில் முதல் இடையூறு கி.பி 55 - 63 வரை பேரரசன் நீரோவின் காலத்தில் நடைபெற்றது.

உரோம் நகருக்குக் கிறிஸ்தவர்கள் நெருப்பு வைத்தார்கள் எனக் கிறிஸ்தவர்கள் மீது பேரரசன் நீரோ குற்றம் சுமத்தி பிரச்சினையை ஆரம்பித்தான். ஆனால் தனது செயல்களை மறைப்பதற்காகப் பேரரசன் நீரோவே உரோம் நகருக்கு தீ வைத்து அந்தக் குற்றத்தைக் கிறிஸ்தவர்கள் மீது சுமத்தியதாக அக்காலத்தில் வாழ்ந்த பலராலும் கூறப்பட்டுள்ளது.

கிறிஸ்தவர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தண்டனைகள்

வரி செலுத்தாமை, படையில் பணிபுரியாமை போன்ற குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டுக் கிறிஸ்தவர்கள் தண்டிக்கப்பட்டமை. 

பசியாக இருந்த சிங்கங்களுக்குக் கிறிஸ்தவர்கள் இரையாகப் போடப்பட்டனர்.

உடலில் எண்ணெய் ஊற்றி, இரவில் தீப்பந்தமாக எரித்தல். 

சிலுவை அறைதல் அல்லது அதற்கொப்பான தண்டனை வழங்கள்.

பேரரசின் அதிகாரத்தைப் பெறும் பொருட்டு நிலவிய போட்டியில் கொன்ஸ்டன்டைனுக்குக் கிறிஸ்தவர்களின் ஆதரவைப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. கிறிஸ்தவர்களின் உதவியுடன் பேரரசனாக வந்த கொன்ஸ்டன்டைன் கி.பி 313 ஆம் ஆண்டு செய்து கொண்ட மிலான் உடன்படிக்கையின் மூலம் ரோமப் பேரரசு முழுவதும் கிறிஸ்தவ சமயம் உத்தியோக பூர்வமான சமயமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பேரரசன் கொன்ஸ்டன்டைனும் கிறிஸ்தவ சமயத்தைத் தழுவிக் கொண்டான். 

கி.பி.380ஆம் ஆண்டு பேரரசனான தியோடோசியஸ் கிறிஸ்தவ சமயம் தவிர்ந்த ஏனைய சமயங்கள் அனைத்தும் அஞ்ஞான மதம் எனக்கூறி அவைகளைப் பின்பற்றுவதைத் தடை செய்தான். அது முதல் கிறிஸ்தவ சமயம் ரோமப் பேரரசின் அரச மதமாகியதுடன் அது விரைவில் பரவவும் தொடங்கியது. பாப்பரசரும் குருமாரும் இம்மதம் பரவும் பொருட்டு ஒன்றிணைந்து செயற்பட்டனர்.

இவ்வாறான தண்டனைகளால் கிறிஸ்தவ சமயத்தை ஒழிக்க முயன்ற பொழுதிலும், அதனைச் செய்ய முடியாது போயின. சமயத்திற்காக உயிரிழந்தோர் தொகை அதிகரித்ததுடன் மேலும் பலர் கிறிஸ்தவ சமயத்தைப் பின்பற்றத் தொடங்கினர். 

கி.பி. 313 ஆண்டில் பேரரசன் கொன்லஸ்ன்டைன் உரோமப் பேரரசில் கிறிஸ்தவ சமயத்தை சட்டப்பூர்வமான மதமாக்கினார். 

கி.பி. 380 ஆம் ஆண்டு போரரசன் நியடோசியால் கிறிஸ்தவ சமயத்தை உரோம போரரசின் அரச மதமாக்கினார். 

பாப்பரசரும் திருச்சபையும்

திருச்சபையின் ஆரம்பம்

கிறிஸ்தவ சமயம் ஆரம்பம் முதலே முறையான அமைப்பினையுடைய தொன்றாகக் காணப்பட்டது. கிறிஸ்துநாதரே சீடர்களிலிருந்து பன்னிருவரைத் தெரிவு செய்து அவர்களுக்குத் திருத்தூதர்கள் எனப் பெயரிட்டார். இந்தப் பன்னிருவரில் பேதுரு எனும் திருத்தூதர் தலைவராக நியமிக்கப்பட்டார். கிறிஸ்துநாதர் இவ்வுலக வாழ்வை முடித்த பின்னரும், பேதுரு அனைத்து சீடர்களாலும் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டார். ஆரம்ப சபையில் தலைவர்கள் மூன்று பிரினர்களாக இருந்தனர். திருத்தூதர்கள், மூப்பர்கள், திருத்தொண்டர்கள் ஆகியோரே இந்த முப்பிரிவினராவார்கள். பின்னர் திருத்தூதர்களின் இடத்தை வகித்தவர்கள் ஆயர்களெனவும், மூப்பர்களின் இடத்தை வகித்தவர்கள் குருவானவர்கள் எனவும் அழைக்கப்பட்டனர்.

கி.பி நான்காம் நூற்றாண்டில் உரோம். ஜெருசலேம், கொன்ஸ்தாந்தி நோபிள், அந்தியோக்கியா, அலெக்சாந்திரியா போன்ற கிறிஸ்தவ சமயம் தொடர்பான முக்கிய நகரங்களில் பெற்ரியாக் என்போரும் பெரிய நகரங்களைக் கொண்ட பிரதேசத்தில் மெட்ரோபொலிட்டன் எனும் பேராயர்களும், நகரங்களுக்குப் பொறுப்பாக அவர்களும், அந்த ஆயர்களின் கீழுள்ள சிறு பிரதேசங்களிலுள்ளோர் குருமார்களெனவும் அறிமுகமாகினர்.

கிறிஸ்தவ சமயம் தொடர்பாக முக்கிய நகரங்களுக்குப் பொறுப்பானவர்கள் - பெற்றியாக்

பெரிய பிரதேசங்களுடனான நகரங்க ளுக்குப் பொறுப்பானவர்கள் - மெற்ரோபொலிட்டன் பேராயர்கள்

நகரங்களுக்குப் பொறுப்பானவர்கள் - ஆயர்கள்

ஆயர்களின் சிறு பிரதேசங்களுக்குப் பொறுப்பானவர் - குருமார்கள்

அனைத்து ஆயர்களிலும், பெற்ரியாக்களிலும் உரோமில் இருந்த ஆயர் திருச்சபையின் தலைவராகக் கருதப்பட்டார். அவர் பேதுருவின் இடத்தில் உள்ளவர் எனவும் ஏற்றுக் கொள்ளப்பட்டார். பிற்காலத்தில் இந்தப் பதவி பாப்பரசர் பதவியாக அறிமுகமானது. தற்பொழுதும் கூட பாப்பரசர் உரோம நகர் ஆயராக கருதப் படுகிறார்.

பாப்பரசர் பதவி

கி.பி நான்காம் நூற்றாண்டு முதல் படிப்படியாக வளர்ச்சியடைந்த பாப்பரசர் பதவி, ஐரோப்பாவில் சக்திமிக்க பதவியாக மாறியது. உரோமப் பேரரசை வீழ்ச்சியுறச் செய்த கோத்திர மக்கள், கிறிஸ்தவ சமயத்தை ஏற்றுக்கொண்டதுடன் பாப்பரசரினதும், திருச்சபையினதும் அதிகாரம் மேலும் வலுவடைந்தது. உரோமப் பேரரசின் கீழ் இல்லாத பிரதேசங்களில் வாழ்ந்த ஒஸ்ரோகொத், விசிகொத்,பிரேங், அங்லோ சாக்சன் போன்ற கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் உரோமப் பேரரசை வீழ்ச்சியுறச் செய்து முறையே இத்தாலி, ஸ்பானியா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் குடியேறினர். உரோமப் பேரரசின் வீழ்ச்சியின் பின்னர் ஆக்கிரமிப்பாளர்களான மக்களுக்குக் கிறிஸ்தவ சமயத்தைத் தெளிவுபடுத்துதல் ஆசீர்வதிப்பர் சபை உள்ளிட்ட பல துறவற சபைகளால் மேற்கொள்ளப்பட்டன.

மத்திய காலத்தின் நடுப்பகுதியில் ஐரோப்பா முழுவதும் கிறிஸ்தவ சமயம் பரவியிருந்ததுடன் திருச்சபைக்கும், பாப்பரசருக்கும் நிறைய அதிகாரங்கள் இருந்தன.

திருச்சபைக்கு, ஏராளமான நிலங்கள் இருந்தது. கல்வி முற்றிலும் திருச்சபையை மையமாகக் கொண்டிருந்தது.  

ஐரோப்பாவில் எல்லா நாடுகளிலுமிருந்து வரியைப் பெற்றுக் கொள்ளும் உரிமை திருச்சபைக்கு இருந்தது.

Post a Comment

அன்பு வாசகரே! உங்களது கருத்துக்களினை இங்கே பதிவிடுங்கள் பிறரும் படிப்பார்கள்

Previous Post Next Post