உலக தாய்மொழி தினம் கட்டுரை
முன்னுரை
ஒரு தாயிடம் குழந்தை உலகத்தை தெரிந்து கொள்கிறது அதே தாயிடம் தான் குழந்தை மொழியையும் கற்றுக் கொள்கின்றது. இதுவே குழந்தை கற்றுக்கொள்ளும் முதல் மொழியான தாய் மொழியாகும்.
ஒவ்வொரு மொழியும் பல நூற்றாண்டு காலமாக மக்களின் வாழ்வாதாரத்துடன் கலந்து அவர்களின் அனுபவங்களால் முதலில் வார்த்தைகளாக உருவெடுக்கின்றன.
பின்னர் இலக்கியங்களால் பெருமை சேர்க்கப்பட்டு, அவற்றை நாம் கற்றுக் கொள்ளவும், அடுத்த தலைமுறைக்கு கற்றுக் கொடுக்கவும் அந்த மொழியே கருவியாகப் பயன்படுகின்றது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த மொழிகளுக்கு மதம் கூட தடையாக இருந்ததில்லை என்பதுதான் உலக தாய்மொழி தினத்தில் வரலாறு. இத்தகைய உலக தாய்மொழி தினம் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
தாய்மொழி தினத்தில் வரலாறு
தாய்மொழி தினம் கொண்டாடப்படுவதன் பின்னணியில் உன்னதமான தியாகம் நிறைந்த வரலாறு உண்டு.
கிழக்குப் பாகிஸ்தான் எனக் கூறப்பட்ட வங்கதேசம் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்த காலப்பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையில் மொழி பிரச்சனை உருவானது.
இந்த மொழிப் பிரச்சினையானது 1952 பெப்ரவரி 21ஆம் திகதி ஒரு பெரும் புரட்சி உருவாகக் காரணமானது. வங்கதேச மாணவர்கள் தங்கள் மொழியை காப்பாற்றுவதற்காக களத்தில் இறங்கினர்
அரசானது அவர்களின் மீது அடக்குமுறையை பிரயோகித்தால் பல மாணவர்கள் உயிர் நீத்தனர். இந்த மொழிப் பிரச்சினைதான் வங்கதேசம் எனும் தனி நாடு பிரிவதற்கு காரணமாக இருந்தது.
இதன் பின் ஐ.நா 1999ம் ஆண்டில் “பிப்ரவரி 21” ஆம் திகதி உலக தாய்மொழி தினமாக அறிவித்தது. இதையடுத்து 2000ம் ஆண்டிலிருந்து, பிப்ரவரி 21ம் தேதி உலக தாய்மொழிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவம்
தாய்மொழியில் கல்வி கற்பதன் மூலமே எளிதில் கற்றுக்கொள்ளவும், அதனை வெளிப்படுத்தவும் முடியும். ஒரு வளமான நாட்டுக்கு அடிப்படை வளமான கல்வி முறையே ஆகும். அதுவும் தாய்மொழிக் கல்வி முறையே ஆகும்.
தாய்மொழிக் கல்வியால் மட்டுமே மனித ஆற்றலை வளமையாக்கவும், ஒருவரது படைப்பாற்றலை அதிகப்படுத்தவும் முடியும். எத்தனை மொழிகளைக் கற்றாலும் ஒருவரின் சிந்தனை உருவெடுப்பது தாய்மொழியில்தான்.
உலக மொழிகள்
உலக அளவில் 100 ஆண்டுகளுக்கு முன்பு 6200 ஆக இருந்த மொழிகள் இன்று 3000க்கும் குறைவாக குறைந்துள்ளதாக மொழியியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் இன்றும் பல்லாயிரக்கணக்கான மொழிகள் வார்த்தை வடிவம் பெறாமல் பேச்சு மொழியாக மட்டுமே உள்ளன.
பழமையான மொழிகளில் கூட பல மொழிகள் இன்றும் கல்வி மொழியாகவும், ஊடக மொழியாகவோ அல்லது கணினி மொழியாக ஆக்கப்படவில்லை.
தாய் மொழியாம் நம் தமிழ்மொழி
பழமை வாய்ந்த மொழியான தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பெருமை தமிழனுக்குண்டு. ஒருவருக்கு ஒருவர் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள உதவிய மொழி பின்னாளில் இனத்தின் அடையாளமாக மாறியது.
இந்தியாவில் 23 சதவீத தமிழ் உள்ளடங்கிய திராவிட தமிழ் மொழியினைப் பேசுகின்றனர். இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக உள்ள 22 மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாகும்.
நம் முன்னோர்கள் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தனர். எவ்வளவு மொழி படித்திருந்தாலும் உணர்வுகளை தாய்மொழியின் மூலம் மட்டுமே வெளிப்படுத்த முடியும்.
முடிவுரை
தேசப்பற்றுள்ள ஒருவனுக்கு நாடும் மொழியும் இரு கண்கள் போன்றன. எனவே தாய்மொழியைக் காத்து அதன் மூலம் நம் நாட்டைக் கட்டியெழுப்புவதே நமது தலையாய கடமை என்பதை உணர்ந்து செயற்படுவோமாக!