MrJazsohanisharma

சிறுவர் கவி மலர் -03 (2004.10.20)

சிறுவர் கவி மலர் -03 (2004.10.20)








    பாலர் பாடசாலை  


பாலர் பாடி ஆடிடும் 

பாடசாலை பாருமே 

காலை மாலை நேரமே 

கடவுள் பாதம் பணிவோமே
 

ஆட நல்ல ஊஞ்சல் உண்டு 

அமர நல்ல நிழல் உண்டு 

ஓட நல்ல வேலியுண்டு 

உறங்க நல்ல பாய் உண்டு 


பாடம் உண்டு 

பாவை உண்டு 

பம்பரமும் பந்தும் உண்டு 

கூடவே உணவும் உண்டு 


குடு குடு என்று ஓடுங்கள் 

கதிரை மேசை உண்டு வா 

சுத்தமாக வந்து நாம் 

சொன்ன பாடம் கற்றபின் 

மகிழ்ச்சியோடு வீடு செல்வோமே.


வீடு 



கொட்டும் மழை 
  கூட எங்கள் 
தலையில் படாது !

கொளுத்தும் வெய்யில் 
  கூட  எங்கள் 
தலையில் சுடாது !

இரவில் உறங்கும் 
  போது எமக்கு 
இன்னல் நேராது !

எங்கள் வீடு 
  உள்ள வரைக்கும்
துன்பம் வராது ! 


சொல்லின் கோலம் 

பாதைகள் கூடுவது சந்தி 
பலர் கூடி உண்ணுவது பந்தி 
தாவியே செல்வது மந்தி 
தாத்தாவின் வயிற்றிலே தொந்தி 

சந்திரன் விற்றான் முட்டை 
காசிலே வாங்கினான் சட்டை 
சட்டையின்  கைகளோ குட்டை 
காரணம் அவன் மிக நெட்டை

புஸ்பம் என்பது ஓர் சொல்லு 
பாட்டிக்கு இதனோடு மல்லு 
சிரித்தால் எடுக்கிறாள் பொல்லு 
அவருக்கு இல்லையே பல்லு   

                         

  மலர்களைப்போல் 



ஒருநாள் உலகில் வாழும் பூவோ 
      உள்ளம் மகிழ்கிறது 

ஒருநாள் உலகில் வாழும் பூவோ 
      மலர்ந்து சிரிக்கிறது 

ஒருநாள் உலகில் வாழும் பூவோ 
      நறுமணம் தருகிறது 

ஒருநாள் உலகில் வாழும் பூவோ 
     இறைவனைத் தொழுகிறது 

பல நாள் வாழும் பூக்கள் நாங்கள் 
    பண்புடன் வாழ்ந்திடுவோம் 

பலரும் போற்றும் படியாய் வாழப் 
    பல கலை கற்றிடுவோம் .  


நெருப்புப் பெட்டி 


   நெருப்பு பெட்டிக்குள்ளே 
 பதுங்கி இருக்கும் நெருப்பே 
 மெதுவாய் உன்னைத் தட்ட 
 சீறி எரிவாய் நெருப்பே 

அடுப்பில் வைத்த நீரை 
கொதிக்க வைப்பாய் நெருப்பே 
அம்மா ஊதும் போது 
அழகாய் எரிவாய் நெருப்பே 

மிளகாய்ப் பழம் போலே 
சிவப்பாய் எரிவாய் நெருப்பே 
மெதுவாய் உன்னைத் தொட்டால்
சுட்டிடுவாய் நெருப்பே .     



        பச்சைக்கிளி      



பச்சைக் கிளியே வா வா வா 

பாலும் சோறும் தின்ன வா 

கொச்சி மஞ்சள் பூச வா 

கொஞ்சி  விளையாட வா !


வட்டமான உன் கழுத்திலே 

வானவில்லை ஆரமாய் 

இட்ட  மன்னர் யாரம்மா 

யானறியக் கூறம்மா !


பையப் பையப் பறந்து வா 

பாடிப் பாடிக் களித்து வா 

கையில் வந்திருக்க வா 

கனி அருந்த ஓடி வா !

  

              எழுதிய மருந்து   

         

வயிற்று வலியென வாணர் துடித்தார் 

                வைத்தியர் உடனே அழைக்கப்பட்டார் 


வந்த மருத்துவர் பரிசோதித்தார் 

            இந்த மருந்தென எழுதித் தந்தார் 


எழுதித் தந்த மருந்தை 

இரவு படுக்கமுன் எடுத்தாற் போதும் 


என்றே கூறிச் சென்றுவிட்டார் 

வாணர் மனைவியும் வைத்தியர் சொற்ப்படி 


எழுதிய மருந்தை எடுத்துக் கொடுக்க 

வாணரும் வாங்கிச் சப்பி விழுங்கினார் 


விழுங்கிய வாணர் விடிய எழுந்து 

நல்ல மருந்தென வலிசுகம் என்றார் 


வைத்தியர் எழுதியத்  துண்டை

மடித்துக் கொடுத்த மனைவியும் மகிழ்ந்தாள் .   

 

கற்று முன்னேறுவோம் 


ஆனா ஆவன்னா படிப்போம் வா 

ஆடிப் பாடி மகிழ்வோம் வா 

பேனா பிடித்து வரைவோம் வா 

பெரியவர் சொல்லைக்  கேட்ப்போம் வா 


கூடிப் பந்து அடிப்போம் வா 

குழலை ஊதி இசைப்போம் வா 

தேடித் கலைத்துப் பிடிப்போம் வா 

தேகப் பயிற்சி செய்வோம் வா 


வானின் சுடராய் திகழ்வோம் வா 

வண்ண நிலவாய் குளிர்வோம் வா 

தேனின் இனிப்பாய் உரைப்போம் வா 

தீங்கை வெட்டிப் புதைப்போம் வா 


எண்ணத்தில் உயர்வாய் இருப்போம் வா 

எங்கள் ஈழம் காப்போம் வா 

திண்ணம் கொண்டோம் திடமாய் வா 

திருத்திய வாழ்வு அமைப்போம் வா 


        கடிதமும் கதையும் 



படலையில் என்ன மணிச்சத்தம் 

பார் பார் தம்பி பார் தம்பி 

படலையில் டிங் டிங் மணிச்சத்தம் 

பார்த்து வருகின்றேன் அப்பா 


கடிதம் வந்தது பிடியுங்கள் 

கடிதம் பிரிச்சுப் படியுங்கள் 

வடிவாய்ப் படிச்சுப் பாருங்கள்

வந்த புதினம் சொல்லுங்கள் 


மாமா போட்ட கடிதம் பார் 

மச்சான் அத்தை நற்சுகமாம் 

நிலா பரீட்சையில் சித்தியாம் 

சித்திரைக்கு வருவோமாம் ?


வேறு புதினம் இல்லயாம் 

இத்துடன் மடலின் நிறைவாம் 

மார்கழிக்கு முன் முடிவை மடலில் 

மகிழ்வுடனே அனுப்புவாதம் .


அறிந்திடுவோம் குறியீடுகளை 


"ஆலயம் தொழுவதும் சாலவும் நன்று "

ஔவையார் சொன்னார் அறிவீரோ ?

காலையும் , மாலையும் கடவுளைத் தொழுதால் 

காரியம் கைப்படும் தெரிவீரோ?


நாளைய உலகில் நல்லவை ஆற்றும்

தம்பியரே ! அன்புத் தங்கையரே !

வேளை வருகையில் வெற்றிகள் காண 

வேண்டும், வேண்டும் சிறுவர்களே !


உலகம் என்னும் உருண்டைப் பந்தை 

உயிர்களுக்காக்க இறைவன் தந்தாரே !

கலகம் செய்தால் காரியம் கெடுமே -ஆதலால் 

கருணை காட்டி வாழ்ந்திடுவோம் .


நாங்கள் நாளை 


ஆடியும் பாடியும் மகிழ்ந்திடுவோம் -நாம் 

அனைவரும் ஒன்றாய்க் கூடிடுவோம் 

தேடித் தேடி படித்திடுவோம் -எம் 

தேவைகளை நாம் நிறைவு செய்வோம் 


அன்னையும் தந்தையும் தெய்வமென்ற அந்த 

ஔவையின்  சொல்லை உணர்த்திடுவோம் 

முன்னோர் வழிகளில் நடந்திடுவோம் -எம் 

முதியவருக்கு கை கொடுத்திடுவோம் 


கல்வியை போதிக்கும் ஆசிரியர் தன்னை 

கண்ணியமாகப் போற்றிடுவோம் 

சொல்வதைக் கேட்டு உயர்ந்திடுவோம் -நாம் 

சுதந்திரமாய் மண்ணில் வாழ்ந்திடுவோம் . 


ர , ற கற்போமா? 



அரை மனத்தோடு கற்காதே 

அறிவுன்   மனதில் நிற்காதே 

அறையினில் குந்தி இருக்காதே 

அவமாய்ப்  பொழுதை கழிக்காதே 


குரைக்கும் நாயிடம் அணுகாதே

குனிந்து கல்லெடுத்தெறியதே  

குறை எவரிடமும் கேட்காதே 

குணம் கெட்டொழிந்து போகாதே 


உரைத்தால் உன்செவி ஏற்காதோ

உள்ளக் கருமை வெளுக்கதோ

உறைக்கச் சொன்னால் வலிக்காதோ 

உலகம் உயர்வது தெரியாதோ 


இரையை எறும்புகள் சோம்பலின்றி 

என்றும் சேர்ப்பதை நீயறிவாய் 

இறை உனக்கறிவைப் போதிக்க 

இத்தனை தந்தான் உணர்ந்திடுவாய்


ல,ள ,ழ படிப்போம் வா...

                                                                             



வாலை தூக்கிக் கன்றுக் குட்டி 
வாழைத்  தோட்டத்தில் ஓடுது 
குலைகள் முற்றி வெட்டும் முன்னே 
குழை என்றெட்டிக் கடிக்குது 
வலைகள் வீச ஓடும் மீனாய்
வளைந்து வளைந்து ஓடுது 
கலையில் வல்ல  கன்றுக் குட்டிக்கு 
களை பிடுங்கிப்  போடுவோம் 

அலை அடிக்கும் வாவி நுரை 
அளைந்து விளையாடுவோம் 
மலையின் ஓரம் பொழியும் தூறல் 
மழையில் நனைந்து  பாடுவோம்
உலையில் அரிசி போட்டிறக்கி 
உழைத்து விளையாடுவோம் 
இலைகளினை எடுத்து ஒன்றாய் 
இழைத்து உணவிட்டுண்ணுவோம்

நீரை பேணுவோம் 

                                                                   

           
உலகம் உய்ய இறைவன் அன்று 
உவந்தளித்த நீரிலே 
கலகம் செய்ய கிருமிகள் நோய் 
கடுகி  வந்து சேருதே

தாகம் தீர்க்க உதவும் தண்ணீர் 
தரையில் விழும் போதிலே 
மேகம் மீது உள்ள தூசி 
மிகுந்து வந்து சேருதே 

குளிக்கும் போது வடியும் தண்ணீர் 
கிணற்றில் மீண்டும் விழுவதால் 
குந்தகமே சேரும் அதை 
குடிப்பதனால் நோய் வரும் 

ஆலையில் சேரும் கழிவு 
ஆற்று நீரில் சேர்வதால் 
மூலை முடுக்கு எங்கும் கிருமி 
முகரும் நாசி நுழையுமே 

புனிதனாக உன்னை என்னை 
புவியில் ஆக்கும் நீரை நாம் 
மனிதனாக மாறி நாளும் 
மதித்து நன்றாய் பேணுவோம் 


பிறர்க்கு உதவுவோம்

                                                                           

அங்கத்தில் பழுத்திருக்கும் 
அனைவருக்கும் உதவுவோம் 
அறிவு கூறும் முதியவரின் 
அருகிலிருந்து உதவுவோம் 

தங்கத்திலும் உயர்ந்தவராய்த் 
தரையினிலே உலகுவோம் 
தடக்கும் கல்லு முள்ளுகளை
தள்ளித் தூர வீசுவோம் 

எங்கள் பின்னே வருபவர்க்கு 
இன்பம் அள்ளி ஊட்டுவோம் 
இதமான பாதை ஒன்றை 
எல்லோருக்கும் காட்டுவோம்  


இரக்கம்



ஒரு நாளும் உயிரினத்தை 
வருத்தக் கூடாது 
ஊறு செய்து விளையாட 
நினைக்க கூடாது 

ஈ எறும்பை 
எங்கள் காலால்
மிதிக்கக் கூடாது
இரக்கம் கருணை 
இதனை நாங்கள் மறக்கக்கூடாது 

ஓருயிரும் வேதனையில் 
தவிக்கக்கூடாது 
உயிரை வருத்தும் ஒருவரையும் 
மதிக்கக்கூடாது  

தம்பி உனக்கு



நாட்டுக்காக உழைத்திடு தம்பி 
நல்ல செயல்கள் செய்திடு தம்பி 
வீட்டுக்கும் ஒரு விழி நீ தம்பி 
விளக்கின் ஒளியும் நீதான் தம்பி 

பாட்டுப்பாடி மகிழ்ந்திடு தம்பி 
பலதும் கற்று உயர்ந்திடு தம்பி 
ஓட்டம் ஓடி உறுதிகொள் தம்பி 
உள்ளத்  தூய்மை உணந்திடு தம்பி 

நல்லவைகள் நாடிடு தம்பி 
நலமே வாழக் கற்றிடு தம்பி 
அல்லவைகள் நீக்கிடு தம்பி 
அனைத்து உலகும் உனதே தம்பி   

 


Post a Comment

அன்பு வாசகரே! உங்களது கருத்துக்களினை இங்கே பதிவிடுங்கள் பிறரும் படிப்பார்கள்

Previous Post Next Post